ராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
1 min read
54 Rameswaram fishermen captured by Sri Lankan Navy
19.12.2021
ராமேசுவரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை ராமேஸ்வரம் பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டபம் தென்கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவர்களை சிறைபிடித்ததுடன் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக மேலும் 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இந்தநிலையில், மீனவர்கள், 8 படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை போனில் தொடர்பு கொண்டு முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் உறுதி அளித்தாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.