கணவரின் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நடிகை லீனா
1 min read
Actress Lena, who acted as the mastermind behind her husband’s cheating
19.12.2021
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி குற்றங்களுக்கு மூளையாக அவரது மனைவியும் நடிகையுமான லீனா செயல்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் மோசடி
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தர, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, சிறையில் உடன் இருந்த இரு தொழிலதிபர்களுக்கு ஜாமின் வாங்கி தருவதாக ஆசை காட்டி, அவர்களது மனைவியரிடம் இருந்து 200 கோடி ரூபாய் பெற்று சுகேஷ் மோசடி செய்தார்.
இது தொடர்பாக பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சுகேஷ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சுகேஷின் மனைவி லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மூளையாக..
சுகேஷ் சந்திரசேகரின் மனைவியான நடிகை லீனா மரியா பால், கணவனின் அனைத்து செயல்களுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார்.
கணவன் சுகேஷ் கைதான விபரம் அறிந்ததும் பல ஆதாரங்களை லீனா அழித்து விட்டார். இந்த வழக்கில் சுகேஷுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அருண் முத்து, ஆனந்த் மூர்த்தி, ஜகதீஷ் ஆகியோர், ‘விசாரணையில் உண்மையை கூறினால் கொலை செய்துவிடுவேன் என லீனா மிரட்டினார்’ என தெரிவித்துள்ளனர்.
சுகேஷுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகப்படுத்தியவர், அவரது நெருங்கிய கூட்டாளி பிங்கி இரானி. இவர் தான் திகார் சிறையில் இருக்கும் சுகேஷிடமிருந்து பணத்தை பெற்று, ஜாக்குலினுக்கு 10கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.