மனைவி காணவில்லை என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்
1 min read
The person who filed the case in the Madurai high Court as his wife is missing has been fined
19.12.2021
பிரிந்து சென்ற மனைவியை காணவில்லை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
வழக்கு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய மனைவி மற்றும் 2 பிள்ளைகளையும் காணவில்லை என சிவகாசி போலீசில் கடந்த மாதம் 1-ந்தேதி புகார் அளித்தேன். இதுவரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. எனவே எனது புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அபராதம்
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதில் அவரது மனைவி, தன் பிள்ளைகளுடன் தனியாக வசிப்பது என்றும், இருவரும் ஒருவரையொருவர் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் போலீசார் முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 1-ந்தேதி வீட்டில் இருந்த தனது மனைவி, பிள்ளைகளை காணவில்லை என மனுதாரர் போலீசில் தவறான தகவலுடன் புகார் அளித்துள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததை மறைத்து இந்த ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த கோர்ட்டை அவர் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் 4 வாரத்தில் மதுரை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறி இருந்தனர்.