வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
1 min read
Aadhar link with voter list Passage of the bill in the Lok Sabha
20.12.2021
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
வாக்காளர் பட்டியல்
ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக ஒரே நபர் சொந்த ஊரிலும், தற்போது வசிக்கிற ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வர வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற முடியாத நிலை வந்து விடும்.
இதற்கான தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும்.இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று தாக்கல் செய்தார்.
நிறைவேற்றம்
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.