பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி-ஒத்தி வைப்பு
1 min read
Amali-adjournment in both houses of Parliament
21.12.2021
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல், அமளி காரணமாக மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினார்கள்.
பாராளுமன்றக் கூட்டம்
கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார்.மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து பா.ஜ., உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
இந்நிலையில், பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் நிறைவு பெற இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இன்று நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி, மக்களவையில் தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் போட்டனர்.
மேலும் லக்கம்பூர் கெரி சம்பவம் மற்றும் மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் அமளி
அதேபோல் இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா – 2021 தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல், பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் பேரணி
அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், லக்கம்பூர் கெரி சம்பவத்தை கண்டித்தும், அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் பாராளுமன்ற வளாகத்தில் வளாகத்தில், எதிர்க்கட்சியினர் பேரணி சென்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் நடந்த இந்த பேரணியில் தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.