மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கொலை; பள்ளி மாணவிகள் ஆத்திரம்
1 min read
Medical student killed for threatening; The rage of the school students
21.12.2021
மாணவிகளை பாலியல் ரீதியாக மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர் பிணம்
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மருத்துவ மாணவர்
மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரேம்குமார் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். காணாமல் போன அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
மாணவிகள் ஆத்திரம்
போலீஸ் விசாரணையில் சென்னை கல்லூரி மாணவர் கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவிகள் இருவரை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் பறித்ததே கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரேம் குமார் தனது பகுதியை சேர்ந்த இரண்டு 10-ம் வகுப்பு மாணவிகளுடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை காட்டி இரண்டு மாணவிகளிடமும் அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இது போன்று தொடர்ச்சியாக மாணவிகளிடம் ரூ.2½ லட்சம் வரை மாணவர் பிரேம் குமார் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிரேம்குமார் கேட்ட போதெல்லாம் பயந்துபோய் மாணவிகள் இருவரும் பணத்தை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். இருவரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வேறு வழியின்றி இந்த பணத்தை எடுத்து வந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
தான் கேட்கும்போதெல்லாம் மாணவிகள் பணம் கொடுத்ததால் பிரேம் குமாரின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவிகள் தவித்து வந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தங்களுடன் பழகி வந்த நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர். அப்போது மாணவர் பிரேம்குமாரின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்யலாம்? என கேட்டுள்ளனர்.
கடத்திக் கொலை
அப்போது நண்பர் அசோக் நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதன்பிறகு தான் பிரேம்குமார் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
மாணவிகளுக்காக அசோக் மாணவர் பிரேம் குமாரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அவர் போலீஸ் பிடியில் சிக்காத நிலையில் அவர் தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 வாலிபர்கள் போலீசில் பிடிபட்டுள்ளனர்.
இந்த 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 4 பேரும் மாணவிகள் இருவரின் நண்பர்கள் ஆவர். கொலைக்கு இவர்கள் நேரடியாக உதவி செய்தார்களா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமறைவாக உள்ள அசோக்கை கண்டுபிடிக்கும் பணியில் ஆரம்பாக்கம் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
விசாரணை
கல்லூரி மாணவர் பிரேம் குமார் கொலை தொடர்பாக பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘பிரேம்குமார் அடிக்கடி மிரட்டி பணம் பறித்துக்கொண்டே இருந்ததாகவும், அதுபற்றி தங்களது இன்ஸ்டாகிராம் நண்பரான அசோக்கிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்’. மாணவிகளின் தூண்டுதலின் பேரிலேயே பிரேம்குமாரை அசோக் கொலைசெய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக பிடிபட்ட 2 மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள மாணவிகளின் நண்பரான அசோக்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர் பிடிபட்ட பிறகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மாணவிகளின் பங்கு என்ன என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.