5 மாநில தேர்தல்: பிரசார கூட்டங்களுக்கு தடை போட 41 சதவீதத்தினர் கருத்துக்கணிப்பில் ஆதரவு
1 min read
5 state elections: 41 percent support in a poll to ban campaign rallies
10-1-2022
5 மாநில சட்டசபை தேர்தலில் பிரசார கூட்டங்களுக்கு தடை போட 41 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்து இருப்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
5 மாநில தேர்தல்
பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிற பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் கடந்த சனிக்கிழமை (8-ந் தேதி) அறிவித்தது.
இதன்படி மத்தியில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கிற முக்கிய இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரகாண்ட், பஞ்சாப், கோவாவில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 14-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் அடுத்த மாதம் 27-ந் தேதியும், மார்ச் மாதம் 3-ந் தேதியும் 2 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இந்த தேர்தலில் கொரோனா காலத்தையொட்டி கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் 15-ந் தேதி வரையில் தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்பு
இந்த தருணத்தில் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில மாவட்டங்கள் உள்பட 309 மாவட்டங்களில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற டிஜிட்டல் சமூக தளம், ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வருமாறு:-
- அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கலாம் என 41 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
- உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் என 5 மாநிலங்களிலும் தேர்தலை ஒத்தி போடுவதற்கு 31 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- 24 சதவீதத்தினர் தேர்தல் பிரசாரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், அவை தொடரவும் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
- தேர்தலால் கொரோனா பரவும் ஆபத்து குறைவாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று 4 சதவீதத்தினர் கூறி உள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 68 சதவீதத்தினர் ஆண்கள், 32 சதவீதத்தினர் பெண்கள்.