தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
1 min read
MK Stalin thanks the Prime Minister for his cooperation in the progress of Tamil Nadu
12.1.2022
தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் – குறிப்பாக, இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மருத்துவக் கல்லூரிகள்
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக இன்று மாலை திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின், “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள்” என்று அவர் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:-
மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் அவர்கள் கலந்துகொள்ளக்கூடிய முதல் அரசு விழா என்பதால் பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தனது பல்வேறு பணிகளுக்கிடையே தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக, மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு தங்களின் நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக, பிரதமர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது தலைவர் கலைஞர் அவர்களின் கனவாகும். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் கல்வி என்ற துணைத் தலைப்பில் ஒரு குறிக்கோளை அறிவித்தார்கள்.
”மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம்” என்று அறிவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிடுதல்களைச் செய்திருக்கிறோம். ‘அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்’ என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுதான் இன்றைய நாள் நிறைவேறி இருக்கிறது.
முன்னோடி மாநிலம்
இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும் – மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு – மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் – குறிப்பாக, இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக்கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன் தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.