July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம்

1 min read

The Burda affair that is taking shape in the state of Karnataka

9.2.2022
கர்நாடக மாநிலத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது.

பர்தா

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ (பர்தா) அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மதத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் காவி துண்டை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதேபோல், மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினார்கள்.

சீருடை

இதனால்கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

போராட்டம்-மோதல்

இதற்கிடையே கடலோர மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வருகிறார்கள். இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா அரசு கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்தும், இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்தும் வந்தனர். இரு தரப்பினரும் கல்லூரி எதிரே திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது இந்து மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு முஸ்லிம் மாணவ-மாணவிகளும் பதிலுக்கு கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையில் சென்ற பஸ் மீதும் கல்வீசி தாக்கினர். இதில் 2 பேரின் மண்டை உடைந்தது. மாணவர்களின் மோதல் வன்முறையாக வெடித்தது.

தடியடி

அங்கிருந்த வாகனங்களையும் தாக்கினார்கள். இதில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால் கண்ணீர் புகைக்குண்டு வீசி அவர்களை கலைத்தனர்.

இதேபோல், பாகல்கோட்டை மாவட்டம் பெரப்பனபட்டியில் தனியார் மற்றும் அரசு கல்லூரியிலும் பர்தா அணிந்து வந்த மாணவிகளுக்கு போட்டியாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். மேலும் இருதரப்பு மாணவர்களும் மாற்றி, மாற்றி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது இருதரப்பு மாணவர்கள் இடையேயும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதுடன், கல்வீசியும் தாக்கினர். இந்த கல்வீச்சு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பாலில் நேற்று பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்து மாணவர்கள் சாலையில் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஹரஹர மகாதேவ்’ என்று கோஷமிட்டப்படி சென்றனர்.

மேலும் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா பகுதியில் உள்ள கல்லூரியிலும் பர்தா, காவி உடை அணிந்து வந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி மாணவ-மாணவிகளை விரட்டியடித்தனர்.

இதேபோல், சிக்கமகளூரு, மண்டியா, விஜயாப்புரா, குடகு, பீதர், துமகூரு, உப்பள்ளி, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களிலும் பர்தா, காவி உடை அணிந்து வரும் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் உண்டானது. அந்தந்த பகுதிகளில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். இதனால் கர்நாடகத்தில் பர்தா விவகாரம் தற்போது கொழுந்து விட்டு எரிகிறது.

144 தடை

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு பர்தா, காவி உடை அணிந்து வருவது தொடர்பாக மாணவர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா நகர், சிகாரிப்புரா, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பால் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் சிவமொக்கா நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த மோதல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் 3 நாட்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டம் உள்பட பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.