100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ மலர்கள் – சீன விஞ்ஞானிகள் ஆய்வு
1 min read
Fossil flowers 100 million years old – study by Chinese scientists
10/2/2022
சீனாவில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த புதைபடிவ மலர்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
டைனோசர் கால மலர்
சீனாவின் ஜுங்தாவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு, டைனோசர் காலத்தில் மலர்ந்த மலர் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்த மலரானது ‘ஆம்பர்’ எனப்படும் மஞ்சள் நிற புதைபடிவ பொருளில் பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மலர்கள் தொடர்பான ஆய்வை அந்த குழு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் ஆய்வு முடிவுகள் ‘நேட்சர் பிளாண்ட்ஸ்’ என்ற ஆய்விதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மியான்மரில் கண்டறியப்பட்ட இந்த 21 மஞ்சள் நிற புதைபடிவ பொருட்களின் மேற்பரப்பு, உருவ அமைப்பு மற்றும் முப்பரிமாண உட்புற அமைப்பையும் இக்குழு பகுப்பாய்வு செய்தது.
பிறகு இந்த புதைபடிவங்களை சி.டி.ஸ்கேன் மூலம் சோதனை செய்த ஆய்வுக்குழுவினர், 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நன்கு பாதுகாக்கப்பட்ட கிளைகள், இலைகள், மற்றும் இதர உறுப்புகளின் வடிவங்களை கண்டறிந்தனர். மேலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் இத்தாவரத்தின் முழு வளர்ச்சியையும் இக்குழு கண்டறிந்துள்ளது.
தென் கிழக்கு ஆசியாவில் மலரும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் தண்டுகளின் இடமாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வு முடிவுகள் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.