கர்நாடகாவில் பர்தா அணிந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற மாணவிகள்- தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டம்
1 min read
Students try to enter college in Karnataka wearing burqas – protest over detention
16/2/2022
கர்நாடகாவில் பர்தா அணிந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற போது ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்தா
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்பின்னர், ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவிட்டது.
போராட்டம்
இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டன. அதேபோல், மாநிலம் முழுவதும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர்.
இந்த நிலையில், அம்மாநிலத்தின் விஜயபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியும் இன்று திறக்கப்பட்டது. அப்போது, அந்த கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் ஐகோர்ட்டு உத்தரவை மீறி மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பர்தா அணிந்து கல்லூரிக்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது, அந்த மாணவிகளிடம் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதியில்லை என்று கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனால், அந்த மாணவிகள் கல்லூரி வாயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ’எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கல்லூரி முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதேபோல், மேலும் சில கல்லூரிகளுக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து வந்ததால் அவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவின் ஒரு சில கல்லூரிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.