தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்தவருக்கு நோட்டீஸ்
1 min read
Notice to a Romanian who campaigned in support of the DMK
18.2.2022
தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தி.மு.க.வுக்கு பிரசாரம்
ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஸ்டெபான் நொகொய்டா. இவர் வியாபாரம் சம்பந்தமாக வணிக விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.
இவரது வியாபார நண்பர் கோவையில் இருக்கிறார். இதனால் அவர் அங்கு சென்றார். கோவையில் பஸ்சில் அவர் சென்றபோது பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை கண்டு ஆச்சரியமடைந்தார்.
தி.மு.க. அரசின் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் அவர் கவரப்பட்டார். இதைத் தொடர்ந்து ஸ்டெபான் நொகொய்டா தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். அவர் பஸ்சிலும், மோட்டார் சைக்கிளிலும் பயணம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். துண்டு பிரசுரம் கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆச்சரியம்
இது தொடர்பாக ஸ்டெபான் நொகொய்டா கூறும்போது, ‘தி.மு.க. அரசின் மக்கள் நல திட்டங்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை மட்டும் அவர் ஒரு நாள் பிரசாரம் செய்தார்.
ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபர் கோவை மக்களிடையே தி.மு.க.வுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நோட்டீஸ்
பிரசாரத்தில் ஈடுபட்டதன் மூலம் ஸ்டெபான் நொகொய்டா விசா விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீங்கள் வந்த நோக்கத்தை விட்டு வேறு செயல்களில் (அரசியல் பிரசாரம்) ஈடுபட்டு உள்ளீர்கள். இதனால் விசா விதிமுறைகளை மீறி விட்டீர்கள். வணிக விசா வைத்திருக்கும் நீங்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் இன்று ஆஜராக வேண்டும். ஆஜராக தவறினால் 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 14-ன் கீழ் வழக்குத் தொடரப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.