28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது
1 min read
In March, 28 years later, a depression formed in the Bay of Bengal
4.3.2022
வங்கக் கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர்எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் காரணமாக தமிழகப் பகுதியில் பருவத்தே நடக்கக்கூடிய அனைத்தும் அண்மை காலமாக மாற்றமடைந்து வருகிறது. ஜனவரியிலும், பிப்ரவரியிலும் கனமழை பெய்கிறது. கடும்வறட்சி ஏற்படுகிறது. திடீர் வெள்ளம்ஏற்படுகிறது. ஓராண்டில் மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டன. ஆனால் ஓராண்டில் பெய்ய வேண்டிய அளவு மழை குறுகிய நாட்களில் பெய்துவிடுகிறது.
பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் மழையால் அழுகி வீணாகின்றன. இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், கூறியதாவது:-
28 ஆண்டுகளுக்குப் பிறகு
மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான். இதுவரை 1938, 1994 ஆகிய இரு ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்பட்டுள்ளன. இவைஇரண்டும் தமிழ்நாடு கரையை நோக்கிநகர்ந்து கரையை வந்தடைவதற்குள் வலுவிழந்துவிட்டன. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இயற்கையின் செயல்பாட்டை 100 சதவீதம் கணிக்க முடியாது.தொழில்நுட்பம் மூலம் முடிந்தவரைகணிக்கப்படுகிறது. அவையும்மாற்றத்துக்குள்ளானதுதான். வானிலையை தினமும் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.