July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

1 min read

10 convicted, including Yuvraj, in Gokulraj murder case

5.3.2022

கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கொலை

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாக பழகினர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து அவர் 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

தற்கொலை

சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ந் தேதி விசாரணையும் நடைபெற்றது.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் மதுரை எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.

குற்றவாளிகள்

இதையடுத்து, கோகுல் ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 8 -ந் தேதி வெளியிடப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.