கும்பாபிஷேகம் நடத்த பழமையான கோவில்களின் விவரம் கணக்கெடுக்கும் பணி
1 min read
The task of enumerating the details of the ancient temples to conduct the consecration
5.3.2022
கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதானமிக்க கோவில்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
யானைகளுக்கு பரிசோதனை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் திருப்பணிகள், புதிய தெப்பகுளங்கள் உருவாக்குதல், பழைய தேர் சீரமைத்தல், புதிய தேர் உருவாக்குதல், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் தலமரக்கன்றுகளை நடுதல், புதிய நந்தவனங்களை உருவாக்குதல் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கோசாலைகளை முறையாக பராமரித்தல், யானைகளுக்கு 15 நாளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்தல், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் இடங்களை மீட்டல், மீட்கப்பட்ட நிலங்களை பாதுகாத்தல், கணினி வழி ரசீது முறையை நடைமுறைபடுத்துதல், புதிய பள்ளி, கல்லூரிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள்…
இதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டில் கோவில் பட்டியலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் புராதானமிக்க கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 270 கோவில்கள் 9 முதல் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இவற்றில் 174 கோவில்கள் நல்ல நிலையில் உள்ளன. 96 கோவில்கள் திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்ற விவரம் இத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின்பு 5 ஆண்டு காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை.
இந்த புதிய அரசு அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலதிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் புராதானமிக்க கோவில்களின் விவரங்களை பெறுவதற்கு அந்ததந்த மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலின் பெயர், நூற்றாண்டு விவரம், கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற விவரம், கோவிலின் தற்போதைய நிலை ஆகியவை விவரம் அனுப்புமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதனால் 12 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.