உக்ரைனில் இருந்து 11 விமானங்கள் மூலம் 2,200 இந்தியர்கள் திரும்பினார்கள்
1 min read
2,200 Indians returned from Ukraine by 11 flights
6.2.2022
உக்ரைனில் இருந்து 11 விமானங்கள் மூலம் இன்று 2,200 இந்தியர்கள் திரும்பினர்.
உக்ரைன்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைன் தனது வான் எல்லையை மூடியதால், இந்தியர்கள் பக்கத்து நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, ஹங்கேரி சென்று அங்கிருந்து தாயகம் திரும்பி வருகிறார்கள்.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் விமானம் மற்றும் இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் 15 விமானங்களில் 3 ஆயிரம் பேர் நாடு திரும்பினார்கள். 12 சிறப்பு பயணிகள் விமானங்கள் மற்றும் 3 போர் விமானங்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.
2,200 பேர்
இன்று 11 விமானங்களில் 2,200 இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 182 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 12.50 மணியளவில் மும்பை வந்தடைந்தது. அவர்களை மத்திய மந்திரி கபில் பட்டில் வரவேற்றார். மீட்கப்பட்ட இந்திய பயணிகளுடன் அவர் உரையாடினார்.
நேற்று வரை 13,700 இந்தியர்கள் மீட்கப்பட்டு இருந்தனர். இன்றுடன் சேர்த்து இதுவரை 15 ஆயிரத்து 900 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார்கள்.
இதில் 17 ஆயிரம் பேர் வரை உக்ரைனில் இருந்து வெளியேறி பக்கத்து நாட்டு எல்லைக்கு வந்துவிட்டனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.