July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

1 min read

MK Stalin’s request to the Prime Minister to take action to allow students returning from Ukraine to continue their studies

7.3.2022
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரினால் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய மாணவர்கள்

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாக, அவருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகத்துக்கு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதல்வர், எஞ்சியுள்ள மாணவர்களும் வரும் நாட்களில் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலை, அம்மாணவர்களின் படிப்பினை சீர்குலைத்துள்ளதாகவும், அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்தலில் உள்ளது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

படிப்பைத் தொடர…

மேலும், உக்ரைனில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நிலவும் சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும், படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், போர் நிறுத்தப்பட்ட பின்னரும், பல்கலைக்கழகங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையிலும் இந்த நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினையில் பிரதமர் அவசரமாகத் தலையிட்டு, சிறப்புக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிட வேண்டுமென்று தெரிவித்துள்ள முதல்வர், உக்ரைனில் தங்களது படிப்பு தடைபட்ட நிலையில், அம்மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண உரிய வழிமுறைகளைக் கண்டறிய உத்தரவிடப்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுதொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு தனது இடைவிடாத ஆதரவை அளிக்கும் என்று தான் உறுதியளிப்பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.