கோயில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு
1 min read
Measurement of 31 thousand acres of land belonging to temples
8.3.2022
நவீன ரோவர் கருவிகளை பயன்படுத்தி கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயில் நிலம்
தமிழகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை கோவில்களுக்கு சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன ரோவர் கருவிகளை பயன்படுத்தி கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 150 நில அளவையாளர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மண்டல வாரியாக நெல்லை மாவட்டத்தில் 2705.79 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கர் என பல்வேறு மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 31,670.64 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நடப்பட்டு கம்பிவேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிலம் அளவீடு பணிகளை விரைந்து முடிக்குமாறு வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.