July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

1 min read

The Arattu festival started with the flag hoisting at the Sabarimala Ayyappan Temple

9.2.2022
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆராட்டு திருவிழா

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

இந்நிலையில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

வழக்கமான பூஜைகளுக்கு பின் மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன் லைன் முன் பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவும் நடந்து வருகிறது.

ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், திருவிழாவையொட்டி சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. உடனடி தரிசன முன் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல் கொண்டு வர வேண்டும். முன் பதிவு செய்த பக்தர்கள், தரிசனத்திற்கு 72 மணி நேரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, கேரள அரசின் சிறப்பு பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம்திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும். இந்த தகவலை கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.