நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி- முதல்வர் தகவல்
1 min read
The Governor has promised to send the bill seeking exemption from NEET examination to the President- Chief Information
15.3.2022
தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிய நிலையில், கவர்னரை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக கவர்னர் – முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக முதல் அமைச்சரிடம் கவர்னர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக நிலுவையிலுக்கும் மற்ற சட்ட முன்வடிவுகள் மீதும் நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.
அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக கவர்னரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.