ராணுவத்துக்கு நிதியை குறைப்பதா?- பாராளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை
1 min read
Reduce funding for the military? – Parliamentary Standing Committee warning
17.3.2022
இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ராணுவத்துக்கு நிதியை குறைப்பதா? என்று பாராளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளளது.
நிலைக்குழு அறிக்கை
பாதுகாப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில், அண்டை நாடுகளுடளான பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆயுதப்படைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முப்படைகளின் மூலதனச் செலவுக்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறிப்பிட்டுள்ள நிலைக்குழு, வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகம் செலவினத்தை குறைக்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான மூலதன செலவுக்கு ரூ.2,15,995 கோடி தேவை என கணிக்கப்பட்ட நிலையில் ரூ.1,52,369.61 கோடி ஒதுக்கப்பட்டதாக நிலைக்குழு தனது அறிக்கையில் கூறி உள்ளது.
‘2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கான திட்டமிடப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு இடையே உள்ள இடைவெளி முறையே ரூ.14,729.11 கோடி, ரூ.20,031.97 கோடி மற்றும் ரூ.28,471.05 கோடி என மிக அதிக அளவில் உள்ளது.
எச்சரிக்கை
பாதுகாப்புத் துறைக்கு இவ்வாறு நிதியை குறைப்பது முப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை சமரசம் செய்வதில் போய் முடியும். நமது அண்டை நாடுகளுடன், குறிப்பாக எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலை, பாதுகாப்புத் தயார்நிலைக்கு உகந்தது அல்ல’ என நிலைக்குழு எச்சரித்துள்ளது.
பாஜக எம்.பி. ஜுவல் ஓரம் தலைமையிலான பாராளுமன்ற நிலைக் குழுவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உட்பட 30 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.