மும்பையில் பாதிக்கப்பட்டது புதிய வகை கொரோனா வைரசா?- மத்தியஅரசு விளக்கம்
1 min read
New type of corona virus infected in Mumbai? – Union Government Interpretation
8.8.2022
மும்பையில் ’எக்ஸ்இ’ என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
கொரோனா புதிய வகை
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்டா, ஒமைக்ரான் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமைக்ரான் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு ’எக்ஸ்இ’ வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த ‘எக்ஸ்இ’ வைரஸ் முதன்முதலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எக்ஸ்இ உருமாறிய வைரஸ் ஒமைக்ரான் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘எக்ஸ்இ’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்த ‘எக்ஸ்இ’ வகை வைரசால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில்…
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ’எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.
இந்நிலையில், மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் இல்லை என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த ‘எக்ஸ்இ’ வகை கொரோனா பரவில்லை. தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.