பீகாரில் இரும்பு பாலம் திருட்டு; அரசு அதிகாரிகள் கைது
1 min read
Government officials arrested for masterminding iron bridge theft in Bihar
11.4.2022
பீகாரில் 60 அடி நீளமுள்ள இரும்பு பாலம் திருட்டு சம்பவத்தில் 2 அரசு அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரும்பு பாலம் திருட்டு
பீகாரில் 60 அடி நீளமுள்ள இரும்பு பாலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் இரண்டு அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு வானிலை துறை அதிகாரி) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இந்த திருட்டு சம்பவத்தில் வானிலைத் துறை அதிகாரி அரவிந்த் குமார், எரிவாயு கட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களுடன் ஆயுதம் ஏந்திய குழுவை வழிநடத்தியுள்ளார். இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்பு பாலத்தை அகற்றினர்.
வெறும் 3 நாட்களில் பாலம் முழுவதும் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.அந்த ஸ்டீல் கட்டமைப்பு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
அதிகாரி
அந்த மாவட்டத்தின் துணை வட்ட அதிகாரியான ராதே ஷியாம் சிங், இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக இருந்துள்ளார். ராதே ஷியாம் சிங், மேலும் ஆறு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு சேனல்கள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
ஜேசிபி இயந்திரம் மற்றும் பிக்-அப் வேன், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.