ஜிஎஸ்டி வரியின் அமைப்பை மாற்ற மத்திய அரசு முடிவு
1 min read
Federal Government decides to change the structure of GST tax
17.4.2022
ஜிஎஸ்டி வருவாயை கணிசமாக உயர்த்தும் வகையில் வரிவிதிப்பு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு விகிதாச்சாரங்கள் உள்ளன. தங்கத்துக்கு மட்டும் 3 சதவீதம் என தனி விகிதாச்சாரம் உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது.
ரூ.1,42,095 கோடி வசூல்
இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலில் கடந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 32,378 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 74,470 கோடியாகவும் உயர்ந்துள்ளது. செஸ் வரி ரூ.9,417 கோடியாகவும் உள்ளது.
உயர்த்த ஆலோசனை
இந்தநிலையில் ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்த பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 5 சதவீதம் விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் கொண்டுவர கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழு ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளதாக தெரிகிறது. அதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக 5 சதவீதம் விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3 சதவீதம் விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு வேறு சில பொருட்களுக்கு 8 சதவீதம் என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சில மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்களை 3 சதவீதம் விகிதாச்சாரத்தில் கொண்டுவரவும், அதேசமயம் 5 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவில் உளள சில அத்தியாவசிய மற்ற பொருட்களை 8 சதவீத விகிதாச்சாரத்தில் வைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
5 சதவீதம் விகிதாச்சாரத்துக்கு பதிலாக 7 சதவீதம், 8சதவீதம், 9 சதவீதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு உருவாக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு 1 சதவீதம் விகிதாச்சார உயர்வுக்கும் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5 சதவீதத்துக்கு பதில் 7 சதவீதம், 8 சதவீதம், 9 சதவீதம் ஆகிய ன்று விகிதாச்சாரங்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் 8 சதவீதம் விகிதாச்சாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் தேர்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக உயரும் என தெரிகிறது.