அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி பரிசீலனை; தமிழ்நாடு அரசு தகவல்
1 min read
Review of the old pension scheme for civil servants; Government of Tamil Nadu Information
17/4/2022
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம்
அதிமுக ஆட்சியில், 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தன. கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டிலும்…
இதேபோல், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலை குறித்து தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்திற்கு நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்கள் கடிதத்தின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன் தங்களுடைய கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.