பெண்தோழிகளுக்காக கொள்ளயைடித்த மாணவர்கள்
1 min read
Students robbed for girlfriends
20.4.2022
பெண் தோழிகளுக்கு செல்வழிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டும் வீரவநல்லூர் நகைக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி கொள்ளை சம்பவத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லுாரில் நகைகடை உரிமையாளர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்கநகைகளில் 3 கிலோ 250 கிராமை போலீசார் மீட்டனர்.ஏப்., 11 இரவு கடையை அடைத்து விட்டு நகைகளை மைதீன் பிச்சை டூவீலரில் எடுத்து சென்ற போது ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி நகைகள், ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது. எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் 6 தனிப்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
கைது
இதில் ஈடுபட்ட வீரவநல்லூர் ஐயப்பன் 24, மருதுபாண்டி மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர். 3 கிலோ 250 கிராம் தங்கநகைகள் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறியதாவது:-
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஒருவர் அளித்த தகவல்படி, குற்றவாளிகள் உற்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மொபைல் போன் டவரில் பதிவான எண்களை ஆய்வு செய்ததில், பாலிடெக்னிக் மாணவன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதோடு, அவர் அடிக்கடி கடையை நோட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து ‘வழக்கமான பாணியில்’ விசாரணை நடத்தியதில் கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.
கொள்ளை சம்பவத்தில் துணையாக அவரது சகோதரர், இவரின் நண்பர் (4 மாணவர்கள்) உள்ளிட்ட 8 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் டிரம்ஸ் இசைக்கலைஞர். இவரும், அவரது சகோதரரின் ஆலோசனைப்படி, பக்கத்து ஊரில் இருந்து இரண்டு பேரை அழைத்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கு பயந்து, நகைகளை டிரம்சிற்குள் மறைத்து வைத்து வயல்வெளியில் புதைத்து வைத்துள்ளனர்.
காதலிகள்
பாலிடெக்னிக் மாணவருக்கு நிறைய பெண் தோழிகள்(காதலிகள்) உண்டு. அவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பதையும், உயர் ரக ஓட்டல்களுக்கு அழைத்து செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு டூவிலர் பரிசாக அளித்துள்ளார். இவரது சகோதரருக்கு ஏராளமான பெண் தோழிகள் உள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, ஏராளமான பெண்களிடம் இருந்து மொபைல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வந்தன. ஆடம்பர வாழ்க்கைக்கும், பெண்களோடு உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும், ஆசைப்பட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.