July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மேலும் 15 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர்

1 min read

Another 15 Sri Lankan Tamils came to Dhanushkodi

25.4.2022

5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 15 இலங்கை தமிழர்கள் இன்று தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் இருந்து நேற்று இரவு படகுகளில் புறப்பட்ட அவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

இலங்கை அகதிகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.

இதன் காரணமாக இலங்கையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங் களை சேர்ந்த மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் வாழ வழியின்றி தவிக்கும் பலர் இலங்கையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக இலங்கை தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். முதன்முதலாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை தமிழர்கள் 20 பேர் ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் குடும்பம் குடும்பமாக வந்தபடி இருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வெளியேற தொடங்கியதால் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கினர்.
அவர்கள் இந்திய கடல் பகுதியில் ரோந்து கப்பல் மற்றும் படகுகளில் சென்று கண்காணித்தபடி இருந்தனர். இந்த நிலையில்தான் இலங்கை தமிழர்கள் பலர் அடுத்தடுத்து குடும்பம் குடும்பமாக தனுஷ்கோடிக்கு வரத் தொடங்கினர்.

கடந்த 22-ந்தேதி வரை 16 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் தனுஷ்கோடிக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவருமே மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் 5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 15 இலங்கை தமிழர்கள் இன்று தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் இருந்து நேற்று இரவு படகுகளில் புறப்பட்ட அவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

இலங்கை யாழ்ப்பாணம் காக்கைதீவு பகுதியை சேர்ந்த பழனியாண்டி (வயது 75), அவரது சகோதரி ஜானகி (63), சதீஷ்குமார்(29), அவரது மனைவி விதுரா(24), மகன் சபரீசன்(3), ஒன்பது மாத குழந்தை சரண்யா, ஜெயராம் (22), அவரது மனைவி பேபிசாலினி(20), மகள் கேசனா, கதிரமலை(72), அவரது சகோதரர் ஜோகன் (73), ஜோகனின் மனைவி மாலா(72), நிரோஜன் (28), அவரது மனைவி வைதீஸ் வரி(20), மகன் குரிசன் ஆகியோர் தனுஷ்கோடி அருகே உள்ள இரட்டை தாளை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்று கடல் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த 15 பேரையும் மீட்டனர். பின்பு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்ட 15 பேரில் 4 பேர் குழந்தைகள் ஆவர். அவர்களைத்தவிர 11 பேரிடமும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மட்டுமின்றி மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டதால் அங்கு வாழமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வாழவழியின்றி தவித்த காரணத்தால் அங்கிருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்கு வந்ததாகவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட 15 பேரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.

இலங்கையில் இருந்து இதுவரை 20 குடும்பங்களை சேர்ந்த 75 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.