இலங்கை மக்களுக்கு உதவ திமுக ரூ.1 கோடி நிதியுதவி
1 min read
DMK provides Rs 1 crore financial assistance to help Sri Lankan people
3,5,2022
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவி
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். மேலும் அரசிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் நன்கொடை வழங்குவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி
இந்த சூழலில் நெருக்கடி நிலையில் இருக்கும் இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.