உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள்- பிரதமர் மோடி
1 min read
Stop fighting in Ukraine immediately – Prime Minister Modi
3.5.2022
உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெர்மனி பயணம்
இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல்நாளான நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி 2-வது நாள் பயணமாக இன்று டென்மார்க் சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி டென்மார்க் செல்வது இதுவே முதல்முறையாகும். விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் நேரில் சென்று வரவேற்றார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து மரியன்போர்க் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்செனும், இந்திய பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சண்டையை நிறுத்த வேண்டும்
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 69-வது நாளாக போர் தொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.