July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அனுப்பினார்

1 min read

The Governor forwarded the NEET Exemption Bill to the Ministry of the Interior

4.5.2022
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.

இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.

இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை ஆளுநரின் செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.