உ.பி.யில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
1 min read
7 members of the same family killed in a car accident in UP
7.5.2022
உத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவுச்சாலையில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருமணத்துக்கு…
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சண்டிலாவில் நடந்த திருமணத்துக்கு சென்றனர்.
திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்றுமுன்தினம் ஒரு காரில் நொய்டாவுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் யமுனா விரைவுச்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்த கார், மதுரா அருகே முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது பலமாக மோதியது.
7 பேர் பலி
இந்த கோர விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. அதற்குள் சிக்கி, காரில் சென்ற ஒரு முதிய தம்பதி, அவர்களின் 2 மகன்கள், 2 மருமகள்கள், ஒரு பேரன் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். முதிய தம்பதியின் மற்றொரு மகனும், மற்றொரு பேரனும் படுகாயம் அடைந்தனர்.
குறிப்பிட்ட காருக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென ‘பிரேக்’ போட்டதால் அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கும் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பிவைத்தனர்.
விபத்தில் முற்றிலுமாக உருக்குலைந்த கார், ஒரு கிரேன் மூலம் அகற்றப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.