விளம்பர பதாகையை தூக்கிய போது மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு
1 min read
2 killed in lightning strike
10.5.2022
விளம்பர பதாகையை தூக்கிய போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
விளம்பர பதாகை
லால்குடி அருகே உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்லத்துரை (வயது 42). டோல்கேட், மேனகா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பணிக்குச் சென்ற செல்லத்துரை நேற்று அப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை கீழே சாய்ந்து கிடப்பதை பார்த்தார்.
2 பேர் சாவு
இதனைத்தொடர்ந்து கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாத்தலை அருகே சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு (வயது 36), விமல்நாத் (28) ஆகியோரின் உதவியுடன் விளம்பர பதாகையை தூக்கி நிறுத்த முயன்றபோது கட்டிடத்தின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்மாற்றியின் மீது உரசியது.
இதனால் விளம்பர பதாகையை பிடித்துக்கொண்டிருந்த மூன்று பேரின் உடலிலும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மூச்சு திணறலில் துடிதுடித்தனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கட்டிட காவலாளி செல்லத்துரை, பெயிண்டர் சேட்டு ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின் விளம்பரத்திற்காக மின்மாற்றியின் அருகே உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை தூக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததின் காரணமாக இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.