‘செல்பி’ எடுத்த மாணவி ரெயில் மோதி பலி
1 min read
Student killed in train collision
15.5.2022
கேரளாவில் கோழிக்கோடு அருகே சக மாணவருடன் ரெயில்வே பாலத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த மாணவி ரெயில் மோதி பலியாகினார்.
செல்பி
கோழிக்கோடு கருவன்திருத்தியை சேர்ந்தவர் நபாத் (வயது 16), பிளஸ்-1 மாணவி. இவர் தனது சக பள்ளி மாணவர் ஒருவருடன் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு கோழிக்கோடு பரோக் ரெயில்வே பாலத்தின் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் அந்த வழியாக கோயம்புத்தூர்-மங்களூரு ரெயில் வந்தது. இந்த ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபாத் ஆற்றுக்குள் விழுந்தார். சக மாணவர் ரெயில்வே பாலத்தின் ஓரத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதில் ஆற்றில் விழுந்த நபாத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான நபாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவருடன் பாலத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த போது ரெயில் மோதி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.