ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; மசூதி பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி கோர்ட்டு உத்தரவு
1 min read
Discovery of Shivalingam in the premises of Gnanavapi Mosque; Varanasi court orders sealing of mosque area
16/5/2022
ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் மசூதி பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஞானவாபி மசூதி
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் இன்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வுப் பணி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் இன்று கடைசி கட்ட வீடியோ பதிவு நடந்தது.
ஆய்வுப்பணி முடிவடைந்த பின் பேசிய ஆய்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த துணை கமிஷனர் ஒருவர் கூறுகையில், கூடிய விரைவில் எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சிப்போம். வீடியோ ஆய்வு பணிகள் தடையின்றி நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
சிவலிங்கம்
ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆகவே, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று வாரணாசி கோர்ட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த பகுதிக்குள் யாரும் நுழைய கோர்ட்டு தடை விதித்தது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.