நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 20ந்தேதி வரை நீட்டிப்பு
1 min read
Extension of time till 20th to apply for NEET examination
16.5.2022
நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு
மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
இளங்கலை நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாள் மே 6ம் தேதி என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு புதிதாக தேர்வுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதன்படி 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிப்பு
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்று முன்தினம் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்வதற்கு காலஅவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற இருந்த நிலையில், மாணவ மாணவிகளின் நலனை முன்னிட்டு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இளங்கலை நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் வருகிற 20ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.