தோரணமலை முருகன் கோயிலில் கிரிவலம்-ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
1 min read
Kirivalam at Toranamalai Murugan Temple-Numerous women attended
16.5.2022
தோரணமலை முருகன் கோயிலில் நடந்த கிரிவலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தோரணமலை முருகன் கோயில் உள்ளது. அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் தங்கி இருந்து மருத்துவ சேவை மற்றும் கல்விச் சேவை செய்த பூமி இது. சுனைகள் சூழ்ந்த இந்த மலையின் மீது இயற்கையாய் அமைந்த குகைக்குள் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் கிழக்குநோக்கி அருள்புரிக்கின்றார். மலை மீது பத்திரகாளி அம்மனுக்கும் சன்னதி உண்டு. மாலையடிவாரத்தில் விநாயகர் உள்ளார்.
கிரிவலம்
இங்கு தமிழ்மாத கடைசி வெள்ளி தோறும் சிறப்பு பூஜை நடைபெறும். உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு விவசாயம் செழிக்க பூஜை நடத்தப்படும். மேலும் மாதந்தோறும் பவுர்ணமி காலையில் கிரிவலம் நடத்தப்படுகிறது. மலைமீது கோவில் அமைந்தால் அங்கு கிரிவலம் பெரிதாக போற்றப்படும். ஆனால் எல்லா மலையைச் சுற்றிலும் வலம் வர போதிய வசதி இருக்காது.
தோரணமலை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்தாலும் கிரிவலம் செல்ல வசதி உள்ளது. இங்கு அகலமான பாதை இல்லாவிட்டாலும் இயற்கை நிறைந்த வழியாக கிரிவலப்பாதை அமைந்துள்ளது.
இன்று(திங்கட்கிழமை) காலை தோரணமலைலயில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. பொதுவாக வைகாசி பவுர்ணமி வைகாசி விசாகமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த மாதம் இரண்டு விசாகம் வருவதால் வைகாசி 29/ந் தேதிதான் வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. அதே நேரம் அப்போது ஒரு நாளுக்கு பின்னர்தான் பவுர்ணமி வருகிறது. எனவே இனறு பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் இணைந்து வந்ததால் கிரிவலம் மகத்துவம் நிறைந்ததாக அமைந்தது-. எனவே தோரணமலை கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்து.
இன்று காலை 6 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. மலையை சுற்றி ஆறரை கிலோ மீட்டர் அவர்கள் நடந்து வந்தனர். வழிநெடுகிலும் தோரமலை முருகா என்று பக்தி கோஷமிட்டபடி வந்தனர். கிரிவலம் முடிந்தவுடன் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.