இறந்த தாயை டிரம்மில் போட்டு சமாதியாக்கிய மகன்
1 min read
The son who buried his dead mother in a drum
16.5.2022
இறந்த தாயை டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி சமாதியாக்கிய மகனை போலீசார் விசாரி்த்து வருகிறார்கள்.
மூதாட்டி
சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் (86). செண்பகத்திற்கு பாபு மற்றும் சுரேஷ் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபு திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றார்.
இளைய மகன் சுரேஷ் (53) திருமணமாகி கெல்சி என்ற மனைவியும், சைமன் (18), சாரா (19) என இருபிள்ளைகள் உள்ளனர். மூதாட்டி செண்பகம் தனது இளைய மகன் சுரேஷ் உடன் வசித்து வந்துள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி தகாறில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 8-ம் தேதி மனைவி கெல்சி தனது பிள்ளைகளுடன் பெருங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து செண்பகமும், சுரேஷ்சும் வீட்டில் தனியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாய் செண்பகத்தை பார்க்காததால் மூத்த மகன் பாபு இன்று காலை தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சுரேஷ் தனது அண்ணன் பாபுவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்தது தகராறு செய்ததுடன் தாய் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து வந்துள்ளார்.
டிரம்பில் சமாதி
இதனால் சந்தேகமடைந்த பாபு தனது தாய் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள், கடந்த சில நாட்களாக செண்பகத்தை பார்க்கவில்லை என்றும் இது குறித்து சுரேஷிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உடனே பாபு நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுரேஷ், தனது தாய் செண்பகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட்டால் பூசி அடக்கம் செய்து சமாதி ஆக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார், டிரம்மில் உள்ள மூதாட்டி செண்பகம் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்க முடியாத காரணத்தால், டிரம்புடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மகன் சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.