காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் பள்ளிக்கூட நேரம் மாற்றம் குறித்து ஆலோசனை
1 min read
Advice regarding change of school time as breakfast is to be provided
18/5/2022
காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தொடக்கப்பள்ளிகள் நேரம் மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
காலை சிற்றுண்டி
அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் மற்றும் காலை உணவு சாப்பிடாமல் வரும் ஏழை குழந்தைகளின் பசியை ஆற்றும் வகையிலும் இந்த திட்டம் வருகிற கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
தற்போது நகர்ப்புற பகுதியில் இருக்கும் தொடக்கப்பள்ளிகள் காலை 8.50 மணிக்கும், கிராமப்புறங்களில் 9 மணிக்கும் தொடங்குகின்றன. இந்த நேரத்தை மாற்றி முன்னதாக திறக்க ஆலோசிக்கப்படுகிறது.
கிராமப்பகுதிகளில் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதற்காக 30 நிமிடம் முன்கூட்டியே திறக்க வாய்ப்பு உள்ளது.
தொடக்கப்பள்ளி மட்டும் தனியாக செயல்படுகிற இடங்களில் பெரும்பாலும் பிரச்சினைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் ஒருசில இடங்களில் நடுநிலை பள்ளிகளாகவும், பிற இடங்களில் உயர் நிலைப்பள்ளிகளாகவும் செயல்படுகின்றன.
இதுபோன்று செயல்படக்கூடிய பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எந்த நேரத்தில் வகுப்புகளை தொடங்குவது, 6 முதல் 8 வரையிலும், 8 முதல் 10 வரையிலும் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் நேரம் மாற்றி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
ஜூன் 13-ந்தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக தொடங்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.