இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்
1 min read
MK Stalin sent relief supplies to the people of Sri Lanka
18.5.2022
இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்களை சென்னை துறைமுகத்திலிருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அனுப்பிவைத்தார்.
இலங்கை
சென்னை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்தநிலையில், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று மாலை (மே 18) அனுப்பிவைக்கப்பட்டது. நிவாரணப் பொருள்களுடன் இருந்த கப்பல்களின் பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தமிழகத்திலிருந்து முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து மேலும் ரூ.128 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.