July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில்

1 min read

Passenger train from Nellai to Thiruchendur and Red Fort

18/5/2022

நெல்லையில் இருந்து வருகிற 30ந் தேதி முதல் செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. அந்த ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

ஆனால் அவற்றில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை ரத்து செய்துவிட்டு பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி சிறப்பு ரெயில்கள் மீண்டும் படிப்படியாக எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரெயில்களில் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பயணிகள் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து மதுரை கோட்டத்தில் இருந்து மீண்டும் பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்செந்தூர்

அதன்படி, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் வருகிற 30ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. ஏற்கனவே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு 7.15 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்று மீண்டும் மாலை திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இரவு 7.40 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் செங்கோட்டைக்கு தினமும் காலை 7 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு நெல்லை வந்தடைந்தது. தற்போது அந்த 2 வழித்தடத்திலும் கூடுதலாக ரெயில் இயக்கப்படுகிறது.

30ந் தேதி முதல்

திருச்செந்தூரில் இருந்து ஒரு ரெயில் நெல்லைக்கு வருகிற 30ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06674) திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் நெல்லையில் இருந்து (06677) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில்10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

செங்கோட்டை

நெல்லையில் இருந்து வருகிற 30ந் தேதி முதல் செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06657) நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வருகிற 31ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06682) செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று ரெயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.