பாகிஸ்தான் பெண் ஏஜெண்டிடம் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக இந்திய வீரர் கைது
1 min read
Indian soldier arrested for leaking military secrets to Pakistani female agent
21.5.2022
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை
இந்தியாவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், முக்கிய ரகசியங்களை கையாள்பவர்கள் போன்றவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தங்களது வலையில் சிக்க வைத்து ரகசியங்களை பெற்று வருகிறது. இதற்கு பணம், அழகிய பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறது.
இது போன்ற பலவீனத்தில் சிக்கி, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்ற பல ராணுவ அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், படை பற்றிய ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் ஜோத்பூரில் துப்பாக்கி ஏந்திய காவல் பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் இருந்து குமாருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண், தன்னை பெங்களூரில் ராணுவ நர்சிங் சர்வீஸ் ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். அவள் குமாரை டெல்லியில் சந்திக்க விரும்புவதாக கூறி அவரை மயக்கி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். குமாரும், அந்த பெண் பாகிஸ்தான் உளவுத்துறையின் பெண் முகவர் என்பதை அறியாமல், அவரிடம் பழகி வந்தார். குமார் தன்னுடைய வலையில் சிக்கியவுடன், அவரை ஏமாற்றி சமூக ஊடகங்கள் மூலம், ரகசியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பற்றி விவரங்களை பெறத் தொடங்கினாள் அந்த பெண் ஏஜெண்ட். அந்த ராணுவ வீரர் பாகிஸ்தான் முகவருடன் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு ரகசிய தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
கைது
இந்நிலையில், இந்த விவரம் ராஜஸ்தான் பகுதியில் இருக்கும் உளவு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்த காரணத்தினால் பல நாட்களாக குமாரின் செயல்பாடுகள், இயக்கம் மற்றும் நடவடிக்கை கண்காணிக்கப்பட்ட பின்னர், விசாரணைக்காக மே 18 அன்று காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.