பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
1 min read
Nirmala Sitharaman announces reduction of excise duty on petrol and diesel
21.5.2022
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை
பெட்ரோல், டீசல் விலை நாளுநாளுக்கு உயர்ந்து வந்தது. உள்நாட்டில் கச்சா எண்ணெய் அதிகமாக கிடைக்காததால் அதிக அளவில் இறக்குமதி செய்வதால் அதன் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால் அனைத்து வகையான எரிபொருள் விலையும் உயர்ந்தது. குறிப்பாக சமையல் எரிவாயு உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் லாரி கட்டணம் உயர்கிறது. அதன்காரணமாக விலைவாசியும் உயர்கிறது.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன.
இதனால் மத்திய அரசு வரியை சற்று குறைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. ஆனாலும் நாளுக்கு நாள் விலை உயர்ந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பே அதிகமாக இருந்தது. ஒன்றிய அரசு வரியை கணிசமாக குறைக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.
குறைப்பு
இந்த நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உள்ளது. அதாவது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெட்ரோல் மீதான மத்தியகலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. இதன் எதிரொலியால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85, டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனையாகிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலால் வரியை குறைத்துள்ளது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.