இந்தோனேசியாவில் திருமணம் ஆன இளம் தம்பதி 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல தடை
1 min read
Young couple married in Indonesia banned from going to the bathroom for 3 days
22.5.2022
இந்தோனேசியாவில் திடாங் சமூகத்தில் திருமணம் ஆன தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
பழங்குடியின மக்கள்
இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்ற இடத்தில் திடாங் பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர். அவர்களது சமூகத்தில், திருமணம் முடிந்த தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வினோத நடைமுறை உள்ளது.
இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் தம்பதியின் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது.
அதனால், இளம் தம்பதியை கண்காணிப்பதற்கென்றே பலர் இருப்பார்கள். தம்பதிக்கு குறைந்த அளவிலான உணவும், நீரும் கொடுக்கப்படும். 3 நாட்கள் முடிந்த பின்னர், அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி அளித்து விடுவார்கள்.
எப்போதெல்லாம் அந்த பழங்குடியின மக்களிடையே திருமண நிகழ்ச்சி நடைபெறுமோ, அப்போது இந்த வினோத நடைமுறையை தம்பதி கடைப்பிடித்தே ஆக வேண்டும். அனைத்து திருமண சடங்கு உள்ளிட்ட நடைமுறைகளும் முடிந்த பின்னர், அந்த தம்பதியை அறை ஒன்றுக்கு அழைத்து செல்வார்கள். அந்த அறையிலேயே தம்பதியின் முதல் 3 நாள் கழியும். ஆனால், அவர்களால் ஆத்திர, அவசரத்திற்கு கழிவறை செல்ல முடியாது. இதற்காக தம்பதியின் உறவினர்களே கண்காணிப்புக்கான பணியை மேற்கொள்ளும் பொறுப்புகளை எடுத்து கொள்கிறார்கள். மோசடி எதுவும் செய்யாமல், உண்மையில் இந்த சவாலில் தம்பதி வெற்றி பெறுகிறார்களா? என்று அவர்கள் உறுதி செய்கின்றனர்.
இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வே நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்ய தவறுபவர்களுக்கு திருமண வாழ்வில் துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது. இதனை இளம் தம்பதி எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தபோதிலும், இன்றைய காலகட்டத்திலும் இந்த வினோத சடங்கை அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.