தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா
1 min read
Student Dharna with infant on college campus seeking permission to write exam
7.6.2022
தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தி்ல் ஈடுபட்டார்.
மாணவி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், பாணவரம் அடுத்த ஆயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காமாட்சி (வயது 20) வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் 2-ம் ஆண்டு படித்து வந்த போது, அவருக்கும், தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனது படிப்பைத் தொடர வேண்டும் என நினைத்த காமாட்சி குழந்தை பிறந்து ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்தார். இதைக் கண்ட பேராசிரியர்கள் பச்சிளம் குழந்தையை கல்லூரிக்குக் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக காமாட்சி விடுப்பு எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இறுதி ஆண்டு தேர்வை எழுத காமாட்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பணம் கட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், இறுதி ஆண்டுதேர்வுக்கு முந்தைய தேர்வான திருப்புதல்தேர்வில் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும், தற்போது 2 மாதங்களுக்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுக்காக கட்டப்பட்ட கட்டணத் தொகையை பேராசிரியர்கள் திருப்பி வழங்கி, காமாட்சி இறுதியாண்டு தேர்வு எழுத முடியாது எனவும், வருகைப் பதிவேட்டில் குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தர்ணா
இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை இறுதி ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். அவரை பேராசிரியர்கள் சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார், காமாட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில், அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.