June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

“மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி் வழங்க தடை இல்லை”- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

“There is no bar to re-employing public welfare workers” – Supreme Court order

8.6.2022
மக்கள் நல பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் பணி் வழங்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நலப்பணியாளர்கள்

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் போது மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். மேலும் பல ஆண்டுகளாக போராட்டமும் நடத்தினார்கள். இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இதற்கான அறிவிப்பு வெளியானது. இதனால் மக்கள் நலப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர் மறுவாழ்வு சங்கம் சார்பாக அதன் தலைவர் தன்ராஜ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-
கடந்த 2011ல் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மற்றும் அதில் இறந்து போன மக்கள் நலப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நடவடிக்கை.
குறிப்பிட்ட இந்த 7500 ரூபாய் தொகையை மட்டுமே ஊதியமாக வழங்குவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மக்கள் நலபணியாளர்களில் பலர் ஓரிரு ஆண்டுகளில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். எனவே ஏற்கனவே முன்னதாக வழங்கப்பட்ட ஊதிய நிர்ணயபடியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடியும் நியாயமான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் புதிய கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறைகால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 7500 ரூபாய் ஊதியம் மட்டுமே என்ற நிர்ணயம் என்பது இத்தனை ஆண்டுகள் மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய சட்ட போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் தெரிவிக்கப்பட்டது.

தடை விதிக்கக் கூடாது

ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன், தமிழ்நாடு அரசு ஏற்கனவே கொரோனா காலத்தில் சந்தித்த நிதி பிரச்சினைகளுக்கிடையேயும் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7500 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து அவர்களை மீண்டும் பணியமர்த்த இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது. எனவே தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்கக்கூடாது, ஏனெனில் ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களில் பலர் தமிழக அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தற்போது வேண்டுமென்றே அரசியலாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அப்போது மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட தங்கள் சங்கத்தில் உள்ளவர்கள் இதுவரை தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்கவில்லை. எனவே அந்த வாதத்தை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.

உத்தரவு

இதனையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உங்கள் சங்க பிரச்சினைகளில் தயவு செய்து அரசியலை கொண்டு வராதீர்கள் என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் முடிவில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பணியினை ஏற்றுக்கொள்ளலாம் என அரசு கூறியிருக்கிறது. மற்றவர்களுக்கு பிரச்சினை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் கூறியுள்ளது. ஆதலால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. எனவே தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்கப் போவதில்லை. மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் புதிய முடிவிற்கு உடன்பட யாவரையும் கட்டாயப்படுத்த கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
==
தாயை சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்
செல்போனில் விளையாடுவதை தடுத்ததால் ஆத்திரம்

லக்னோ,ஜூன்.9-

சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான். செல்போனில் கேம் விளையாடுவதை தாயார் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

வீடியோ கேம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகன், 9 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது கணவர் ராணுவ அதிகாரி. மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வருகிறார். சிறுவன் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான்.
இதை அவனது தாயார் கண்டித்து செல்போனில் கேம் விளையாடுவதை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டான். தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் குறி வைத்து சுட்டான். இதில் பலத்த காயம் அடைந்த தாய் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தாயின் பிணத்தை வீட்டில் மறைத்து வைத்தான். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க ஏர்பிரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறான். 3 நாட்கள் பிணத்துடன் மகன் இருந்தான். வீட்டில் உள்ள 9 வயது சகோதரியிடம் கொலை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினான்.

நாடகம்

தந்தை வீட்டுக்கு வந்த போது எலெக்ட்ரீசியன் தாயை சுட்டுக் கொன்றதாக கூறி மகன் நாடகமானடினான். போலீஸ் விசாரணையில் அவன் தாயை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இதைத் தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். பெற்ற தாயை மகனே சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.