காய்ச்சல், இதய பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1 min read
41 drugs used for fever and heart attack are substandard- shocking information in the study
11.6.2022
காய்ச்சல், இதய பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை என்பது பற்றி ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருந்து
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 1,233 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.