அண்ணாமலை கேட்ட மன்னிப்பு- தி.மு.க.-பாஜக இணைய தளத்தில் மோதல்
1 min read
Annamalai apologizes for misinformation about Arcot Veerasamy- DMK-BJP clash on website
11.6.2022
தி.மு.க. மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி பற்றி தவறான தகவலுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து தி.மு..க-பாஜகவினர் இணைய தளத்தில் மோதுகின்றனர்..
ஆற்காடு வீராசாமி
சென்னை: தி.மு.க. மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மறைந்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல் பரவியது.
அப்போது நாமக்கல்லில் பொதுக்கூட்ட த்தில் இருந்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் அதை மக்கள் மத்தியில் தெரிவித்தார். ஆனால் அந்த தகவல் தவறானது. ஆற்காடு வீராசாமி நலமுடன் தான் இருக்கிறார்.
கண்டனம்
இது பற்றி அவரது மகன் கலாநிதி வீராசாமி எம்.பி. டுவிட்டரில் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
தனது கொள்ளுபேரனின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா.ஜனதா தலைவர் தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
வருத்தம் தெரிவித்தார்
இதையறிந்ததும் அண்ணாமலை வருத்தம் தெரிவித்து பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
உங்களுடைய தந்தையார் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவனைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன். நாமக்கல் பொதுக்கூட்ட த்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ஆனால் இந்த பிரச்சினையை இத்துடன் விடவில்லை. தொடர்ந்து தி.மு.க.வினர் அண்ணாமலையை வறுத்து எடுத்து விட்டனர். முட்டாள் தனமான பேச்சு, வாய்திறந்தாலே பொய் தான், என்பது உள்பட சரமாரியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
கறைபடியாதவர்
உடனே பா.ஜனதாவினரும் பதிலடி கொடுக்க தொடங்கினார்கள். தப்பு செய்தால் மன்னிப்பு கேட்பவன் மனிதன். வாழ்க்கையில் தப்பாக பேசி தாங்கள் செய்வது, சொல்வது எல்லாம் சரி என்று நினைக்கும் கூட்டத்துக்கு மத்தியில் கறைபடியாதவர் அண்ணாமலை என்றும் தான் சொன்ன தகவல் தவறென்றவுடன் வருந்துகிறேன் என பதிலளிக்கும் பண்பு தி.மு.க. தலைவர்களுக்கு சுட்டு போட்டாலும் வராத மாண்பு என்றும் பதிவிட்டனர். இந்த மாதிரி இரவில் நீண்ட நேரம் வலைத்தள வாக்குவாதம் நீடித்தது.