கர்ப்பமான காதலியை கவனிக்க கைதிக்கு ஜாமீன்
1 min read
Bail for prisoner to take care of pregnant girlfriend
11.6.2022
பேறுகாலம் நெருங்கி வருவதால் கர்ப்பிணி காதலியை கவனிக்க ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது..
கைது
டெல்லியை சேர்ந்த நபர் உளவுத்துறை மற்றும் ‘ரா’ அமைப்பின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததற்காகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் அந்த நபரின் காதலியும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ் இன்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, இந்த மோசடி வழக்கில் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், அந்த பெண் தற்போது ஜாமீனில் உள்ளார். இதனிடையே, தன்னுடன் வாழ்ந்துவந்த தனது காதலி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அவர், இரு வீட்டு பெற்றோர் ஆதரவு இல்லாமல், 95 வயதான தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். ஆகையால், பேறுகாலம் நெருங்கி வருவதால் தனியாக உள்ள கர்ப்பிணி காதலியை கவனிக்க தனக்கு ஜாமீன் வழங்குமாறு சிறையில் உள்ள அந்த பெண்ணின் கணவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, தாத்தா, பாட்டியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு நிறைமாத கர்ப்பிணியான பெண்ணுக்கு வேறு துணை இல்லாத காரணத்தை கருத்திக்கொண்டு சிறையில் உள்ள அந்த பெண்ணின் காதலனுக்கு 3 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி பூனம் பம்பா இந்த உத்தரவை பிறப்பித்தார். 30 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையை செலுத்திவிட்டு ஜாமீனில் செல்லும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஜாமீனில் செல்லும்போதும் மனுதாரர் தனது செல்போன் எண்ணை விசாரணை அமைப்பிடம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் எப்போதும் ஆஃப் செய்யப்படாமல் அதில் லொக்கேஷன் அமைப்பு எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என கூறி மனுதாரருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.