இணையதள திருமண தகவல் மையத்தில் 25 வயது இளம்பெண் என கூறி 51 வயது பெண் மோசடி
1 min read
A 51-year-old woman cheated by claiming to be a 25-year-old teenager at an online marriage information center
14.6.2022
இணையதள திருமண தகவல் மையத்தில் 25 வயது இளம்பெண் என பதிவு செய்து தந்தை-மகனிடம் 51 வயது பெண் மோசடி செய்துள்ளார்.
திருமண வரன்
சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் தமிழரான ஒருவர் தனது 29 வயது மகனான கோவிந்தகுணசேகரன் முரளிகிருஷ்ணாவுக்கு திருமண வரன்களை தேடி வந்துள்ளார். இது தொடர்பாக 2018-ம் ஆண்டு தமிழ் இணைதள திருமண தகவல் மையத்தில் முரளிகிருஷ்ணா பெயரில் பதிவு செய்துள்ளார்.
அந்த இணையதளத்தில் 51 வயதான மல்லிகா ராமு என்ற பெண் கீர்த்தனா (வயது 25) என்ற பெயரில் அறிமுகியுள்ளார். கீர்த்தனா என்ற பெயரில் முரளிகிருஷ்ணாவுக்கும் அவரது தந்தைக்கும் மல்லிகா அறிமுகமாகியுள்ளார். முரளியின் தந்தை கீர்த்தனாவை (மல்லிகா) தொடர்பு கொண்டபோது அவர் முதலில் தன் தாயிடம் அனுமதி கேட்கும்படி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து முரளியின் தந்தையிடம் மல்லிகாவே கீர்த்தனாவின் தாய் என பேசியுள்ளார். அதன் பின்னர் கீர்த்தனா என்ற பெயரில் மல்லிகா முரளியிடம் வாட்ஸ் அப்பில் பேசியுள்ளார். செல்போன் காலிலும் பேசியுள்ளார். முரளி வீடியோ காலில் பேச முயற்சித்தபோது கீர்த்தனா அதை நிகாரரித்துள்ளார்.
வேறு பெண் படம்
தான் ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ தளத்தில் கவுன்சிலராக பணியாற்றி வருவதாகவும் இதனால் கேமரா போன்களை பயன்படுத்த கூடாது ஆகையால் வீடியோ கால் பேச முடியவில்லை என கூறியுள்ளார். 51 வயதான மல்லிகா தனது உறவுக்கார இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையதள திருமண தகவல் மையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த இளம்பெண் (27 வயது) சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றி வருவதால் முரளியை நம்ப வைக்க அந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். 2019-ல் ராணுவத்தில் ஒப்பந்தமும் முடிந்து ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த உடன் திருமணம் செய்துகொள்வதாக முரளியை கீர்த்தனா (மல்லிகா) நம்ப வைத்துள்ளார்.
ஆனால், 2019-ல் கீர்த்தனா குறிப்பிட்ட காலம் வந்த பின்னரும் அவர் சிங்கப்பூர் திரும்பவில்லை. மேலும், அமெரிக்காவில் உள்ள தனது சகோதரனுடன் உள்ள தனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமண தேதி குறித்து அவர்களிடம் விவாதிக்கமுடியவில்லை என ஏமாற்றியுள்ளார். மேலும், தான் சமூக சேவைகள் செய்துவருவதாகவும் இதற்காக ஏதேனும் உதவும்படியும் முரளியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து, மல்லிகாவின் (கீர்த்தனா) வங்கிக்கணக்கிற்கு டிசம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரை முரளி 4 ஆயிரத்து 750 சிங்கப்பூர் டாலர்கள் இந்திய மதிப்பில் 2.66 லட்ச ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். இதேகாரணத்தை கூறி முரளியின் தந்தையிடமிருந்து 1 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் 56 ஆயிரம் ரூபாய் பணத்தை மல்லிகா பெற்றுள்ளார். இதன் மூலம் முரளி மற்றும் அவரின் தந்தையிடமிருந்து மொத்த 3.22 லட்ச ரூபாய் மல்லிகா பெற்றுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள சிங்கப்பூர் வருமாறு முரளி கூறவே அதை கீர்த்தனா (மல்லிகா) தொடர்ந்து நிகாகரித்து வந்தார்.
கைது
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டுவதாக உணர்ந்த முரளி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 25 வயது கீர்த்தனாவாக திருமண இணையதளத்தில் பெயர் பதிவு செய்து மோசடி செய்து வந்த 51 வயது மல்லிகாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மல்லிகா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்து. இந்நிலையில், இணையதள திருமண தகவல் மையத்தில் 25 வயது பெண் போல பதிவு செய்து இளைஞர் மற்றும் அவரின் தந்தையிடம் மோசடி செய்த மல்லிகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளி மல்லிகாவிற்கு 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, மோசடி குற்றவாளி மல்லிகா சிறையில் அடைக்கப்பட்டார்.