டெல்லியில் சரத் பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
1 min read
Mamata Banerjee meets Sarath Pawar in Delhi
14.6.2022
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. தலைநகர் டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
சந்திப்பு
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று டெல்லி சென்றடைந்தார். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இருவரது சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.